ஸ்மார்ட் போன்கள், கம்ப்யூட்டரின் அனைத்து வேலைகளையும் மேற்கொள்வதாகக் கூறினாலும், அவை எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் முழுப் பயனையும் தர இயலவில்லை. இந்தக் குறையைப் போக்கிட, போன் அளவில் அல்ல, ஒரே ஒரு விரல் அளவில் வந்துள்ளது.
விண்டோஸ் 8.1 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர். இந்த சிறிய கம்ப்யூட்டர், அடிக்கடி பயணத்தில் உள்ளோர் பயன்படுத்த எளிதானதாக இருக்கும். இண்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த சிறிய கம்ப்யூட்டர் “கம்ப்யூட் ஸ்டிக் (Compute Stick)” (PPSTCK1A32WFC) என அழைக்கப்படுகிறது. இதன் விலை 150 டாலர். (ஏறத்தாழ ரூ. 9,000)
கம்ப்யூட்டரின் சரித்திரத்தில் இது ஒரு புதிய மைல் கல். முழுமையான ஒரு கம்ப்யூட்டர் ஒரு சிறிய பிளாஸ்டிக் குச்சியில் திணிக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். இந்த ஸ்டிக் ஒரு எச்.டி.எம்.ஐ. ஸ்டிக். இதனை எச்.டி.எம்.ஐ. போர்ட் உள்ள டி.வி. அல்லது டிஸ்பிளே ஸ்கிரீனில் இணைத்து செயல்படுத்தலாம். ப்ராசசர்களை மட்டுமே தயாரித்து வரும் இண்டெல் நிறுவனம், வழங்கும் 'முழுமையான கம்ப்யூட்டர்” இது. இதன் பரிமாணம் 103 x 37 x 12 மிமீ.
இந்த ஸ்டிக் கம்ப்யூட்டரில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Intel Atom Z3735F ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8.1 (32 பிட்). பிங் தேடல் வசதியுடன் கிடைக்கிறது. இதனை விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம். இதன் ராம் மெமரி 2 ஜி.பி. (2GB of DDR3L 1333MHz), ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இந்த நினைவகத்தினை அதிகப்படுத்த, மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைக்கும் வழி ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் யு.எஸ்.பி. 2 வகை போர்ட்டும் உள்ளது. புளுடூத் 4.0 இயங்குகிறது. இயங்குகையில் உருவாகும் வெப்பத்தைத் தணிக்க சிறிய மின் விசிறி உள்ளது.
உடனடியாக ஏதேனும் ஓர் இணைய தளத்தினைப் பார்க்க வேண்டுமா? இதனை எச்.டி.எம்.ஐ. போர்ட் உள்ள டிவியில் இணைத்து இயக்க வேண்டியதுதான். பயணத்தில் ஒரு விடுதியில் தங்கியுள்ளீர்களா? அறையில் இருக்கும் டிவியில் இணைத்தால், கம்ப்யூட்டர் ரெடி. இதற்கான மின்சக்தியை யு.எஸ்.பி.போர்ட் வழியாக இணைத்துக் கொள்ளலாம். இதன் உள்ளே பேட்டரி இல்லை. எனவே, மின் இணைப்பை நீக்கினால், சேவ் செய்யப்படாத டேட்டா அழிந்து போகலாம். இணையத்தைத் தேடிப் பார்க்க, சிறிய அளவில் டாகுமெண்ட்களை உருவாக்க, எடிட் செய்திட, யு ட்யூப் விடியோ பார்க்க, போட்டோக்களைக் கண்டு ரசிக்க என ஓரளவிற்கு இது முழுமையான கம்ப்யூட்டராக இயங்குகிறது.
இதில் தரப்பட்டுள்ள கிராபிக்ஸ் கார்ட் Intel HD Graphics. இதன் மூலம் யு ட்யூப் படங்கள் எளிதாக தொடர்ந்து கிடைக்கின்றன.
150 டாலர் விலையில், பாக்கெட்டில் எடுத்துச் செல்லும் அளவில் ஒரு கம்ப்யூட்டர் என்ற வகையில் இது ஒரு சிறப்பான சாதனம் தான். எந்த எச்.டி.எம்.ஐ. போர்ட் இருக்கும் டிவியையும் இது கம்ப்யூட்டர் ஆக்கிவிடுகிறது. புளுடூத்தில் இணைக்கப்படும் கீ போர்ட் ஒன்றும் மவுஸும் இருந்துவிட்டால், இன்னும் சிறப்பாக இதனை இயக்கலாம்.
சில டிவிக்களின் எச்.டி.எம்.ஐ. போர்ட்களில் இதனை இணைப்பது சிரமமாக இருந்தாலும், இடையே ஒரு சிறிய போர்ட் ஒன்றை வைத்து சமாளிக்கலாம்.
No comments:
Post a Comment