ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet protocol எனபதைக் குறிக்கிறது.
அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது.. இதனை ஆங்கிலத்தில்; uniqueness எனப்படுகிறது.
இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும், இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.
ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும். ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது, மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ளா இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும். பைனரி எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 பிட் எண் எனக் கருதப்படுகின்றன. இந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு நிலைகளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட ஒவ்வொரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருக்க முடியும். இவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 வெவ்வேறான் சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவாக்கலாம். அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் கணினிகளுக்கு வெவ்வேறான ஐபி முகவரிகளை வழங்கி விடலாம்..
க்ளையனட் / சேவர் என்ன வேறுபாடு
இணையத்தில் இனைந்துள்ள ஒவ்வொரு கணினியையும் சேர்வர் / க்ளையண்ட் என இரு வகைப்படுத்தலாம். இணையத்தில் இணைந்துள்ள ஏனைய கணினிகளுக்கு சேவை வழங்கும் கணினிகளை சேர்வர் (Server) எனப்படுகிறது. இவற்றுள் வெப் சேர்வர் (web server) , மெயில் சேர்வர் (mail server) எனப் பல வகையுண்டு. அவ்வாறே இந்த சேர்வர்களிலிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் கணினிகளை க்ளையண்ட் ( Client) எனப்படுகிறது.
.உதாரணமாக இணையத்தில் இணைந்து யாஹூ இணைய தளத்தைப் பார்வையிட விரும்புகிறீர்கள். அப்போது நீங்கள் யாஹூ நிறுவனத்தின இணைய தளம் சேமிக்கப்பட்டிருக்கும் சேர்வரையே அணுகுகிறீர்கள். அந்த சேர்வரே உங்களுக்கான சேவையை வழங்குகிறது. சேவையைப் பெற்றுக் கொள்ளும் உங்கள் கணினியை க்ளையண்ட் எனப்படுகிறது, இங்கு சில கணினிகள் சேர்வராகவோ க்ளையண்டாகவோ தொழில் படவும் வாய்ப்புள்ளது. ஒரு சேர்வர் இணையத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளையும் வ்ழங்கலாம். சேர்வரில் இயங்கும் மென்பொருள் வெப் சேர்வராக, மெயில் சேர்வராக (Mail Server) , எப்டிபி (FTP Server) சேர்வராக இயங்கலாம்.
ஐபி முகவரிகள் எண்களால் ஆனது. அது தசம எண்ணாகவோ அல்லது பைனரி இலக்கமாகவோ இருப்பினும் எண்களை நம்மால் நினைவில் வைத்திருப்பது இலகுவான விடயமன்று. இதனைக் கருத்தில் கொண்டே ஐபி முகவரிக்குப் பதிலாக சொற்களைப் பயன்படுத்தும் முறை அறிமுகமானது. இதனை டொமேன் நேம் சிஸ்டம் (Domain Name System) எனப்படும். இதற்காக டொமேன் நேம் சேர்வர் பயன்படுத்தப்படுகிறது. இந்த டொமேன் நேம் சேர்வர்கள் ஐபி முகவரிகளையும் அதற்குரிய டொமேன் பெயர்களையும் கொண்ட ஒரு தரவுத் தளத்தைப் பேணி வருகிறது. வெப் பிரவுஸரில் நீங்கள் ஒரு இணைய தள முகவரியை டைப் செய்யும்போது வெப் பிரவுசர் இந்த டொமேன் நேம் சேர்வரையே முதலில் அணுகுகின்றன. அந்த இணைய தள முகவரிக்குரிய ஐபி முகவரியைக் கண்டறியும் டொமேன் நேம் சேர்வர் அதனை வெப் பிரவுஸருக்குத் தெரியப்படுத்துகிறது. இங்கு சரியான ஐபி முகவரியைப் பெற்றுக் கொள்வதற்குப் பல டொமேன் நேம் சேர்வர்களின் பங்களிப்பு இருக்கும். ஒரு இணைய தளத்துக்குரிய ஐபி முகவரியை நீங்கள் அறிந்திருந்தால் அதன் மூலமும் ஒரு இணைய தளத்தைப் பார்வையிட முடியும்.
ஐபி முகவரியை எவ்வாறு அறிந்து கொள்வது?
விண்டோஸ் இயங்கு தளத்தில் ஸ்டாட் மெனுவில் Run தெரிவு செய்ய வரும் ரன் பொக்ஸில் cmd என டைப் செய்து ஓகே செய்யுங்கள். அப்போது தோன்றும் விண்டோவில் ipconfig என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த உங்கள் கணினியின் ஐபி முகவரியைக் காணலாம். ஒரு வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருந்தால் மட்டுமே ஐபி முகவரியைக் காணலாம் எனபதையும் நினைவில் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment